இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்தநிலையில் இந்த கூட்டத்தொடர் தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற வியூக குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி, கேசி வேணுகோபால் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். பட்ஜெட் கூட்டத்தொடரில், ஒத்த எண்ணங்களை கொண்ட எதிர்க்கட்சிகளோடு இணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பட்ஜெட் கூட்டத்தொடரில் விவசாயிகள் பிரச்சனை, சீனாவுடனான எல்லை பிரச்சனை, கரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல், ஏர் இந்தியா நிறுவன விற்பனை, அத்திவாசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளையும் எழுப்ப இந்த காங்கிரஸ் வியூக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.