மேற்குவங்க மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கு பிறகு அம்மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது பாஜக.
தேர்தல் முடிந்ததிலிருந்து திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக வினர் ஒருவரை ஒருவர் தாக்கி தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவை எதிர்த்து போராட இணைந்து செயல்பட வருமாறு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். அனால் அவரது இந்த அழைப்பை இரு கட்சிகளும் நிராகரித்துள்ளது.
மக்களவை தேர்தலில் கூட்டணி விஷயத்தில் மம்தா மீது கோபத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள், காங்கிரஸின் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.
மம்தாவின் அழைப்பு குறித்து பேசிய அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கூறுகையில் ‘‘மேற்குவங்கத்தில் பாஜக வளர்ந்து வருவதற்கு மிகமுக்கிய காரணமே மம்தா பானர்ஜி தான். தனக்கும் பாஜகவுக்கும் மட்டுமே மாநிலத்தில் போட்டி இருப்பது போன்ற தோற்றத்தை அவர் உருவாக்க முயலுகிறார். எங்களுடன் இணக்கமாக செல்ல விரும்புவதாக கூறும் அவர் முதலில் திரிணமூல் காங்கிரஸில் சேர்க்கப்பட்ட, எங்கள் கட்சியை சேர்ந்த 17 எம்எம்எல்ஏ -க்களை மீண்டும் காங்கிரஸூக்கு அனுப்ப வேண்டும். பிறகு பாஜகவை எதிர்த்து போராட எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்’’ எனக் கூறினார்.
இந்த அழைப்பு குறித்து பேசியுள்ள மேற்குவங்க மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுஜான் சக்கரவர்த்தி கூறுகையில் ‘‘பாஜகவுக்கு எதிராக போராடும் தகுதியை மம்தா பானர்ஜி இழந்து விட்டார். அவரால் மற்றொரு பாசிச இயக்கத்தை எதிர்க்க முடியாது. மாநிலத்தில் வன்முறையை தூண்டுவதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் பங்குள்ளது. மம்தா கட்சியினரை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இல்லை’’ எனக் கூறினார். துணைக்கு அழைத்த இரு கட்சிகளும் முடியாது என கூறிவிட்டு நிலையில் மம்தா தற்போது இதுகுறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.