போக்குவரத்துத் துறையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு காவலில் இருந்து வருகிறார். மேலும் இலாகா இல்லாத அமைச்சராகவும் இருந்து வருகிறார்.
அதே சமயம் செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடரக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் சில வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடரலாம் என உத்தரவிட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல். ரவி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், “ஒரு அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அதனால் செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடரத் தடையில்லை. சென்னை உயர்நீதிமன்றம் சரியான தீர்ப்பை தான் வழங்கியுள்ளது. அதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது” என உத்தரவிடப்பட்டுள்ளது.