- தெ.சு.கவுதமன்
குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அங்கே மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க. தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து அங்கே முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், குஜராத்திலுள்ள கேடா மாவட்டத்தின் மஹுதாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய அமித்ஷா, "காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வகுப்புவாத மோதல்கள் நிறைய நடந்து வந்தன. அப்படியான மோதல்களுக்கு வகுப்புவாத சக்திகளுக்கு 2002-ல் சரியான பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதனால்தான் குஜராத் 22 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது" என்று பேசினார்.
அவரது பேச்சுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்ததோடு, "நீங்கள் 2002-ல் கற்றுக்கொடுத்த பாடம் என்ன தெரியுமா? பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள். பில்கிஸ் பானோவின் 3 வயதுக் குழந்தை மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இசன் ஜாப்ரியை படுகொலை செய்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பதே. நீங்கள் கற்றுக்கொடுத்த பாடத்தால்தான் டெல்லியிலும் மதக்கலவரம் நடந்ததா என்பதைத் தெரிவிப்பீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
குஜராத் கலவரத்தின் மூலமாக ஏற்பட்ட மதப் பிளவுதான் அங்கே பா.ஜ.க. வலுவாகக் காலூன்ற உதவியாக இருந்தது. எனினும், அமித்ஷா, மோடி மீது இதுதொடர்பாகக் குற்றச்சாட்டுகள் இருந்ததால் கலவரத்தை ஆதரித்து அவர்கள் பேசுவது கிடையாது. ஆனால் சமீபத்தில்தான் அந்த கலவர வழக்குகளில் மோடி, அமித்ஷா ஆகியோர் குற்றமற்றவர்களென்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அதையடுத்து தற்போது கலவரத்தை ஆதரித்துப் பேசியிருப்பதாகத் தெரிகிறது. குஜராத் கலவரங்களின் கொடூரம் குறித்து மீள் பார்வை பார்த்தால்தான் அதன் வலியை நம்மால் உணர முடியும்.
2002-ம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அயோத்திக்குச் சென்றுவிட்டு அகமதாபாத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலில் கரசேவகர்கள் பயணம் செய்தனர். அந்த விரைவு வண்டி கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 70 பேர் அதில் சிக்கிப் பலியானார்கள். அதன் எதிரொலியாக, குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை தூண்டப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களாக நிகழ்ந்த வன்முறை வெறியாட்டத்தில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என 2000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள்.
சர்தார்புரா கிராமத்தில் ஒரே வீட்டிலிருந்த 33 முஸ்லிம்கள் எரித்து படுகொலை செய்யப்பட்டனர். இஸ்லாமியர்கள் பெருமளவு குடியிருந்த குல்பர்கா குடியிருப்பினுள் கலவரக்காரர்கள் நுழைந்து பல வீடுகளைத் தீவைத்து எரித்ததில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சன் ஜாஃப்ரி உள்பட 69 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பெஸ்ட் பேக்கரிக்கு தீவைத்ததில் அங்கே பணியாற்றியவர்கள் உட்பட 14 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இதுபோன்ற துயரச் சம்பவங்களைப் பெரிய பட்டியலிடலாம்.
ராதிக்பூர் கிராமத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானோ என்ற பெண்மணி, அவரது மூன்றரை வயது மகள் சலேஹா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் மீது வன்முறையாளர்கள் கொடூரமான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் என்னவானார்களென்றே தெரியவில்லை. பில்கிஸ் பானோ, அவரது தாயார் மற்றும் மூன்று பெண்களையும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவர்களைக் கொடூரமாகக் கொன்றனர். பில்கிஸ் பானோ மயக்கமடைந்ததால் அவரையும் அவரது குழந்தையையும் மட்டும் விட்டுவிட்டுச் சென்றனர். இதுதொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கால் பல்வேறு அச்சுறுத்தல்கள், இடைஞ்சல்கள் செய்யப்பட்டன. அனைத்தையும் மீறி தனது குற்றச்சாட்டுகளை நிரூபித்து 11 பேருக்கு தண்டனை கிடைக்கச் செய்தார். அந்த குற்றவாளிகளைத்தான் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதியளித்ததாகக் கூறி குஜராத் அரசு அவர்களை விடுதலை செய்தது. இவற்றைத்தான் அசாதுதீன் ஓவைசி அமித்ஷாவுக்கு பதிலடியாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒன்றிய அமைச்சராக இருப்பவர் மதரீதியாக பிரிவினை மனநிலையோடு பிரச்சாரக் கூட்டத்தில் பேசியிருப்பதை காங்கிரஸ் கட்சியும் கண்டித்துள்ளது.