மேற்கு வங்கத்தில் வருகிற மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே பரபரப்பாக இருந்து வந்த தேர்தல் களம், தேர்தல் தேதி அறிவிப்பிற்குப் பிறகு சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், பாஜகவிற்கும் நேரடி போட்டி இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு கட்சிகளைத் தவிர, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இரண்டும் இணைந்து போட்டியிடுகின்றன.
இந்தநிலையில், இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகள் உள்ள நிலையில், 291 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த வேட்பாளர் பட்டியலில் 50 பெண்கள், 42 முஸ்லிம்கள், 96 பட்டியலினத்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் தற்போதைய எம்.எல்.ஏக்கள் மற்றும் மந்திரிகள் உள்பட கிட்டத்தட்ட 20 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் நிற்கப்போவதை மம்தா பானர்ஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த தொகுதி சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு மாறிய முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியின் தொகுதியாகும். சுவேந்து அதிகாரி அந்த தொகுதியின் முகம் எனக் கூறப்படுமளவிற்கு நந்திகிராமில் செல்வாக்கு உள்ளவர். அவரை எதிர்த்து மம்தா நேரடியாகக் களமிறங்குகிறார். நந்திகிராமில் போட்டியிடப் போவதாக தெரிவித்தபோது, இந்த தொகுதியில் மம்தா போட்டியிட்டால் அவரை 50 லட்சம் வாக்குகளில் தோற்கடிப்பேன் அல்லது அரசியலை விட்டு விலகுவேன் எனத் தெரிவித்திருந்தார். அதேபோல் மேற்கு வங்க பாஜக மேலிடப் பார்வையாளர், அந்த தொகுதியில் நிற்குமாறு மம்தாவிற்கு சவால் விடுத்திருந்தார். சவாலை ஏற்று மம்தா அங்கு போட்டியிடப்போவது, மேற்கு வங்க தேர்தலை இன்னும் விறுவிறுப்பாகியிருக்கிறது.