நடைபாதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞரை பெண் ஒருவர் விரட்டியடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள எஸ்என்டிடி சாலையில் சிக்னல் விழுந்தும் அதனை மதிக்காமல் பாதசாரிகள் நடந்து செல்லும் போதும் இருசக்கர வாகனங்கள் இயக்கப்படுவதாக அடிக்கடி போக்குவரத்து காவல்துறைக்கு புகார் வந்திருந்த நிலையில், இன்று போலீஸ் பாதுகாப்பு அதிகம் போடப்பட்டு அத்துமீறும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்தனர். மேலும் அவ்வாறு செல்லும் வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அதே சாலையில் பெண் ஒருவர் பிளாட்பாரத்தில் நடந்து செல்லும் போது அதே பிளாட்பாரத்தில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் எதிரில் வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு சக்கர வாகனத்தை வந்த இளைஞரை பார்த்த அந்த பெண் தன் மீது வாகனத்தை மோதிவிட்டு பிளாட்பாரத்தில் செல் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் வாகனத்தை பிளாட்பாரத்தில் இருந்து இறக்கி சாலைக்கு கொண்டு சென்றார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.