இலங்கையில் சீனா துறைமுகம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "இலங்கை அம்பாந்தோட்டை பகுதியில் சீன அரசு துறைமுகம் அமைப்பதைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.
இந்திய பெருங்கடலில் சூயஸ் கால்வாய் அருகேயுள்ள மலாக்கா நீரிணைப்புக்கு அருகில் அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளது. இத்துறைமுகத்தை சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்கு 1.12 மில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விட்டுள்ளது. இத்துறைமுகம் 4500 எண்ணெய் கப்பல்கள் உட்பட 36 ஆயிரம் கப்பல்களை கையாளும் வசதி உடையது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒட்டியுள்ள 269 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தி, அதில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக சீனாவுக்கு வழங்கிட இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் சீனா கடற்படைத்தளம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் அமையுமானால், அது இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். சீனா இலங்கை கடற்பகுதியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதால் தமிழகத்திற்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இறுதிப் போரின் போது ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு சீனா இராணுவ ரீதியாக பெருமளவில் உதவியது. தற்போது தமிழகம் அருகில் சீன துறைமுகம் அமைவது தமிழகத்தின் நலனுக்கு எதிரானது.
இச்சூழலில் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட தமிழ்நாட்டின் பகுதியான கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மீனவர்களின் நலனைக் காக்கவும், தமிழ்நாட்டின் மீதான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும் உதவும்.
எனவே, இலங்கை அம்பாந்தோட்டை பகுதியில் சீன அரசு துறைமுகம் அமைப்பதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளோம்". இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.