ராஜஸ்தான் மாநிலம் ராம்கார் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் பெண்ணுக்கு அங்குள்ள கம்பவுண்டரே பிரசவம் பார்த்த பொழுது அந்த குழந்தை கோரமாக இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராம்கார் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட மருத்துவர் யாரும் பணியில் இல்லாததால் அங்குள்ள கம்பவுண்டரே பிரசவம் பார்த்துள்ளார். குழந்தை வெளியே வர திணறிக்கொண்டிருந்த பொழுது அவர் அந்த குழந்தையை கவனக்குறைவாக வெளியே இழுத்துள்ளார். இதில் அந்த குழந்தையின் உடல் மட்டும் அவர் கையில் வந்துவிட, தலை தனியாக துண்டிக்கப்பட்டு பெண்ணின் வயிற்றுக்குள்ளேயே சிக்கிக்கொண்டது. சம்பவம் நிகழ்ந்தவுடன் என்ன செய்வதென்று தெரியாத அந்த கம்பவுண்டர் நஞ்சுக்கொடியை கூட அகற்றாமல் துண்டிக்கப்பட்ட உடலை மட்டும் பிணவறையில் வைத்துள்ளார். மேலும் அந்த பெண்ணுக்கு குழந்தைபிறப்பது கடினம் என உறவினர்களிடம் கூறி ஜெய்சால்மர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல கூறியிருக்கிறார். பிரச்னை பெரிதாகவே அதன்பிறகு அங்கு வந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் வயிற்றில் இருந்த தலையை நீக்கினர். இதனையடுத்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இது குறித்து காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.