உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், 7 ஆம் தேதி ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவு காரணமாக தெலலிங்கா ஆற்றில் திடீரென கடுமையான நீர்வரத்து ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் 204 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இதுவரை வெள்ளத்தில் சிக்கிப் பலியான 55 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 35 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால், வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 25 முதல் 35 பேர் வரை சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படும் தபோவன் சுரங்கத்தில், இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப்படை தெரிவித்துள்ளது. சுரங்கத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணிகள், 24 மணிநேரமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ரிஷிகங்கா, தவுலி நதியில் நீர்மட்டம் உயர்ந்ததால் சாமோலி மாவட்டத்திலும், தபோவன் சுரங்கத்திலும் மீட்புப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.