காற்று மாசை குறைக்க நாடு முழுக்க பட்டாசுகள் வெடிக்க தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் டெல்லியின் நிலைமைதான் மிக மோசம், ஏற்கனவே டெல்லியில் காற்று மாசு அதிகம். இன்னும் பட்டாசுகளை வெடித்துத்தள்ளினால் டெல்லி நகரம் என்ன ஆகும்.
இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையிலும், இந்த தீபாவளி அன்று டெல்லியை காற்று மாசில் இருந்து காப்பாற்றவும் டெல்லியில், டெல்லி அரசின் சுற்றுசூழல் செயலாளர் சி.கே மிஷ்ரா மற்றும் சுற்றுசூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் கூடி ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். அதில் நவம்பர் 1 முதல் 5 வரை ‘சுத்தமான காற்று வாரம்’ எனும் கருத்தின் அடிப்படையில் தீபாவளி வாரத்தை காற்று மாசை கட்டுக்குள் வைத்திருக்க திட்டமிட்டுள்ளனர்.
டெல்லி மற்றும் அதனை சுற்றி இருக்கும் நகரங்களான குர்காம், ஃபாரிடாபாட், நொய்டா மற்றும் காசியாபாட் ஆகிய ஐந்து மாநிலத்திலும் 52 குழுக்குளை அமைத்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தக் குழுக்களில் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து ஒருவரும் இருபார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மக்கள் மத்தியில் பட்டாசு வெடிப்பதினால் ஏற்படும் மாசு பற்றியக் குறைபாடுகளையும், உச்சநீதிமன்றம் விதித்துள்ள இரண்டு மணி நேரம் கட்டுப்பாடுகளை மீறி மக்கள் பட்டாசு வெடிக்காமலும் கவனித்து வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு மட்டுமின்றி இந்த வாரம் முழுக்க டெல்லியில் கட்டிட வேலைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்றும், கட்டிட வேலை சம்மந்தப்பட்ட லாரிகளுக்கும் மற்றும் கட்டிட கழிவுகளை ஏற்றி செல்லும் லாரிகளுக்கும் தடை என்று அறிவித்துள்ளது. தடையை மீறி லாரிகளை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.