தனது தந்தையின் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள சிவாஹா கிராமம். இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் வேத்பால் சிங்கின் மகள் அஞ்சலி குமாரி. இவர் பில்லு கேரா பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை 11ஆம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில், அஞ்சலி குமாரி அதிருப்தியாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்த அஞ்சலி, தனது தந்தையை வீட்டுக்கு வரும்படி சொல்லிவிட்டு, அவரது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். வீட்டின் கழிவறையில் சடலமாகக் கிடந்த அஞ்சலியைக் கண்ட வேத்பால் சிங், மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
11ஆம் வகுப்பு தேர்வில் அஞ்சலி மிகச்சிறந்த மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனாலும், பள்ளியில் முதல் மதிப்பெண் எடுக்க முடியவில்லை என்ற விரக்தியில் இருந்துள்ளார். இதுதான் அவர் தற்கொலைக்கான காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.