ஜம்மு காஷ்மீரில், கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, நடத்தப்பட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன்படி, அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கக்கூடிய உமர் அப்துல்லா முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
இந்த சூழலில், 6 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் முதல் கூட்டத்தொடர் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில், தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான அப்துல் ரஹீம் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, நேற்று முன் தினம் சட்டசபை கூடியதும், மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ வஹீத் பாரா, ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். இதற்கு பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால், அன்றைய நாளின் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, நேற்று சட்டசபை கூடியபோது, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான தீர்மானத்திற்கு குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போதும், பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அமளியில் ஈடுபட்டும் சபாநாயகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, நேற்றைய நாளும் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மீண்டும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூடியதுமே, பா.ஜ.க எம்.எல்.ஏவும், எதிர்கட்சித் தலைவருமான சுனில் சர்மா தீர்மானத்தின் மீது பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவாமி இத்திஹாத் கட்சி எம்.எல்.ஏ குர்ஷித் அகமது ஷேக், சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற வகையில் எழுதப்பட்டிருந்த பதாகை ஒன்றை காண்பித்தார். இதனை கண்டதும், பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஓடிவந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர் வைத்திருந்த பதாகையை பிடிங்கி கிழித்தனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு நடந்ததால், அவை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சபாநாயகர் அவையை சிறிது நேரம் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.