குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த நிலையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லி மதுரா சாலையில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. 2 போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த மோதலால் 6 காவலர்கள் மற்றும் 35 க்கும் மேற்பட்ட மாணவர்களும் காயமடைந்தனர். இருப்பினும் மாணவர்கள் அங்கு விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வலுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக சம்பவங்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் கொண்டுவந்தார். இதில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக கோரப்படும் நிலையில் நீதிமன்றம் இதனை விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
அப்போது பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, "நாங்கள் உரிமைகளை நிலைநாட்டுவோம். ஆனால் அது கலவரங்களின் போது அல்ல. முதலில் கலவரங்கள் நிறுத்தப்படட்டும். பின்னர் நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்கும். நாங்கள் உரிமைகள் மற்றும் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. வன்முறை மற்றும் பொது சொத்துக்களை அழித்தல் தொடரும் வரை நீதிமன்றம் இதனை விசாரிக்க முடியாது. அவர்கள் மாணவர்களாக இருப்பதால், அவர்கள் சட்டம் ஒழுங்கை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளலாம் என்று அர்த்தமல்ல" என தெரிவித்துள்ளார்.