திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு சென்னை விமான நிலையத்தில் நடந்தது போன்ற சம்பவம் தனக்கும் நடந்துள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெறும் உரம், ரசாயனம் மற்றும் தனிநபர்களின் விவரங்கள் குறித்த பாதுகாப்பு மசோதா குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க திமுக எம்.பி. கனிமொழி நேற்று சென்னையிலிருந்து டெல்லி சென்றார். அப்போது விமான நிலையத்தில் பணியிலிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழிக்கு இந்தி தெரியாததை சுட்டிக்காட்டி "நீங்கள் இந்தியரா?" எனக் கேள்வி கேட்டது சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று விமான நிலையத்திற்கு சென்றேன். அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் போலீஸ், என்னிடம் இந்தியில் எதையோ சொன்னார். அதற்கு நான், எனக்கு இந்தி தெரியாது. ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள் என்றேன். உடனே அவர், நீங்கள் இந்தியரா எனக் கேட்டார். உடனே நான் திடுக்கிட்டேன். இந்தி தெரிந்தால் போதும் அது இந்தியராக இருப்பதற்கு சமமா என்பதை அறிய விரும்புகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், "சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் வழக்கத்துக்கு மாறானது அல்ல. என்னை உட்பட பலருக்கும் இப்படி நடந்துள்ளது. நான் தொலைபேசியில் பேசும்போது இந்தியில் பேசக்கூறி அரசு அதிகாரிகள் முதல் சாமானிய மக்கள் வரை வலியுறுத்தியுள்ளார்கள். சில நேரங்களில் நேருக்கு நேர்கூடக் கூறியுள்ளனர். இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். இதை வன்மையாக எதிர்க்க வேண்டும்.
மத்திய அரசு பணியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் என்று அரசு எல்லோருக்கும் அறிவுறுத்த வேண்டும். இந்தி தெரியாத பிற மாநிலத்தார் அரசு பணிக்குச் செல்லும்போது விரைவாக இந்தி மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், இந்தி மொழி தெரிந்தவர்கள் மத்திய அரசுப் பணிக்கும், பதவிக்கும் செல்லும்போது, ஆங்கிலத்தை ஏன் சரளமாக பேச, கற்க முடியாது?'' எனத் தெரிவித்துள்ளார்.