நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வட மாநிலங்களில் கலவரம் உச்சத்தில் உள்ளது.
இந்நிலையில் குடியுரிமை சட்டம் தொடர்பாக யோசனைகளை கூற விரும்புவோர் கூறலாம் என்றும், சட்ட விதிகளை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மேலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடவும், நீதிமன்றம் செல்லவும் மக்களுக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளது. அதேபோல் ஆலோசனை, விவாதத்திற்கு பிறகே குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில் இ- மெயில் முகவரியோ, (அல்லது) அலுவலகத்தின் முகவரியோ மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.