இளம் மருத்துவர்கள் பணம் சம்பாதிப்பதையே முதன்மையாகக் கருதுகின்றனர் என அண்மையில் இணையத்தில் பிரபலமான சைக்கிள் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ர மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் 87 வயதான ஹோமியோபதி மருத்துவர் தண்டேகர் கடந்த 60 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள ஏழை மக்களுக்குக் குறைந்த பணத்தில் மருத்துவ சேவையை வழங்கி வருகிறார். கரோனா பாதிப்பு காரணமாகக் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்குச் சரியான மருத்துவ வசதி கிடைக்காத நிலையில், வீடு வீடாக மருத்துவ சிகிச்சை அளிக்க தினமும் தனது மிதிவண்டியில் 10 கி.மீ வெறுங்காலுடன் பயணம் செய்கிறார் தண்டேகர். அண்மையில் இவர் குறித்த செய்திகள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் தனது மருத்துவ சேவை குறித்துப் பேட்டியளித்துள்ள தண்டேகர், "கடந்த 60 ஆண்டுகளாகத் தினமும் கிராமவாசிகளுக்கு மருத்துவ சேவை வழங்க நான் கிராமங்களுக்குச் செல்கிறேன். கரோனா பயம் காரணமாக, ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் பயப்படுகிறார்கள், ஆனால் எனக்கு அத்தகைய பயம் இல்லை. இப்போதெல்லாம், இளம் மருத்துவர்கள் பணம் சம்பாதிப்பதையே முதன்மையாகக் கருதுகிறார்கள். அவர்கள் ஏழைகளுக்குச் சேவை செய்ய விரும்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.