குடியுரிமை சட்ட திருத்த மசோதாவானது கடந்த 2016ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால், மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. சிறிய மாற்றங்களுக்கு பின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கிய நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு முந்தைய குடியுரிமைச்சட்டப்படி ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த, ஜெயின், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய மதத்தினர் இந்தியாவில் 12 ஆண்டுகள் தங்கியிருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்கப்படும். இது தற்பொழுது 6 ஆண்டுகள் என மாற்றப்பட்டுள்ளது. மேலும் முறையான ஆவணங்கள் இல்லாமல் 6 ஆண்டுகள் தங்கியிருந்தாலும் அவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் வகையில் சட்டம் மாற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இதனை எதிர்த்து அவையில் போராட்டமும் மேற்கொண்டனர். இந்த சட்ட திருத்தத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன.