தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது தந்தையை நினைவு கூர்ந்ததற்கு பிரதமர் மோடிக்கு சிராக் பஸ்வான் நன்றி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளன. அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும், வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், பா.ஜ.க கூட்டணியை ஆதரித்து, பிரதமர் மோடி இன்று முதல் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இதில் சசாரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் ரகுவன்ஷ் பிரசாத் சிங் ஆகிய இரண்டு மகன்களை இழந்து பீகார் தவிப்பதாகவும், ராம்விலாஸ் பாஸ்வான் அவரின் கடைசி மூச்சு வரை தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் பேசினார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிராக் பாஸ்வான், எனது தந்தையை நினைவு கூர்ந்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. என் தந்தையின் மீது பிரதமரின் அன்பையும் மரியாதையையும் பார்த்து ஒரு மகனாக மகிழ்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.