இந்தியா - சீனா எல்லையில் கடந்த ஆண்டு, இரு நாட்டு வீரர்களுக்கும் மோதல் நடந்தது. அதிலிருந்து எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. எல்லையில் அமைதியை மீட்டெடுக்க இருதரப்பும் இதுவரை 13 கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன. இதில் 13வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதற்கிடையே இந்திய எல்லைப்பகுதியில் சீன வீரர்கள் ஊடுருவுவதாகவும் தகவல் வெளியானது. மேலும், எல்லைப்பகுதியில் சீனா தொடர்ந்து கட்டுமானங்களை மேற்கொண்டுவருவதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகிவந்தது. சீனாவிற்குப் பதிலடி தரும் வகையில் இந்தியாவும் எல்லையில் தனது படைகளைக் குவித்துள்ளதோடு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறது.
இந்தநிலையில் கிழக்கு பகுதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, சீனா மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டில் மாதிரி கிராமங்களை அமைப்பது கவலைக்குரிய விஷயம் என தெரிவித்துள்ளார். எல்லையில் தற்போதைய நிலவரம் குறித்துப் பேசிய அவர் கூறியுள்ளதாவது, “சீன இராணுவத்தின் வருடாந்திர பயிற்சி காரணமாக, அதன் செயல்பாடுகள் ஓரளவிற்கு அதிகரித்துள்ளது. ஆனால் ஆழமான பகுதிகளில்தான் இந்த அதிகரிப்பு உள்ளது.
இரு தரப்பினரும் (இந்தியா, சீனா) மெய் கட்டுப்பாட்டு கோட்டுக்கு நெருக்கமாக உள்கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அது சில சமயங்களில் பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. மெய் கட்டுப்பாட்டு கோடு மற்றும் ஆழமான பகுதிகளில் நாங்கள் எங்கள் கண்காணிப்பை மேம்படுத்தியுள்ளோம். எந்தத் தற்செயல் நிகழ்வையும் சமாளிக்க ஒவ்வொரு பகுதியிலும் போதுமான சக்தி நம்மிடம் உள்ளது. ரோந்து செல்லும் முறையில் அதிக மாற்றமில்லை. சில பகுதிகளில் ஓரளவிற்கு ரோந்து பணி அதிகரித்துள்ளது.
நாம் கண்காணிப்பு ட்ரோன்கள், ஆள் இல்லா விமானங்கள் ஆகியவற்றை எல்லைப்பகுதியில் பயன்படுத்துகிறோம். நம்மிடம் சிறந்த கண்காணிப்பு ரேடார்கள், சிறந்த தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளன. தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது முக்கிய பகுதியாக உள்ளது. அதை நோக்கி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சீன இராணுவத்தின் வியூகத்தின்படி, மாதிரி கிராமங்கள் எல்லைக்கு அருகில் வந்துள்ளன. அது எவ்வாறு பயன்படுத்தப்படப்போகிறது என்பது கவலைக்குரிய விஷயம். எங்கள் திட்டங்களில் அதைக் கவனத்தில் கொண்டுள்ளோம்.”
இவ்வாறு கிழக்கு பகுதி இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.