சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வந்த பன்னோக்கு மருத்துவமனை பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. இந்த மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ திறந்து வைக்கவுள்ளார். இந்த நிலையில் இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் மாளிகையில் திரௌபதி முர்மூவை சந்தித்து கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா அழைப்பிதழை கொடுத்தார்.
அப்போது பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிய கலைஞரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தையும் குடியரசுத் தலைவரிடம் கொடுத்தார். இதையடுத்து குடியரசுத் தலைவர் மருத்துவமனை திறப்பு விழா வருவதற்கு சம்மதம் தெரிவித்து ஜூன் 5 ஆம் தேதி சென்னை வரவுள்ளார்.
குடியரசுத் தலைவருடனான சந்திப்பை முடித்துவிட்டு சென்னை திரும்புவதற்காக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். அப்போது மகாராஷ்டிரா செல்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் விமான நிலையம் வந்திருக்கிறார். அப்போது விமானத்திற்காக வி.ஐ.பி அறையில் காத்திருந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.