
சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வந்த பன்னோக்கு மருத்துவமனை பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. இந்த மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ திறந்து வைக்கவுள்ளார்.
இதனையொட்டி குடியரசுத் தலைவரைச் சந்தித்து அழைப்பிதழ் கொடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை டெல்லி புறப்பட இருந்தார். இதற்காக நேற்று மாலை சென்னை விமான நிலையம் வந்தார். ஆனால், அவர் செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவரது டெல்லி பயணத்தை ரத்து செய்து வீட்டிற்கு திரும்பினார்.
இந்த நிலையில் இன்று காலை விமானத்தின் மூலம் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் மாளிகையில் திரௌபதி முர்மூவை சந்தித்து கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா அழைப்பிதழை கொடுத்தார். மேலும், அந்த சந்திப்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம் வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.