புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (22/08/2022) காலை 10.00 மணிக்கு கூடியது. அப்போது, 2022- 2023 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ரங்கசாமி பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில், புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மையம் அமைக்கப்படும்; காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கு ரூபாய் 802 கோடி ஒதுக்கீடு செய்து அரசுப் பள்ளிகளில் பொலிவுறு வகுப்புகள் அமைக்கப்படும். புதுச்சேரியில் சட்டப்பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும்.
புதுச்சேரியில் உள்ள மீனவக் கிராமங்களில் மிதக்கும் படகுத்துறை அமைக்கப்படும். காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி ரூபாய் 80 கோடியில் புதிய அரசு மருத்துவமனைக் கட்டப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு வழங்கும் தொகை ரூபாய் 2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தாண்டு முதல் +1, +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். காரைக்கால்- இலங்கையின் காங்கேசம் துறைமுகத்துக்கு இந்தாண்டு பயணிகள் சரக்கு கப்பல் சேவை தொடங்கப்படும். தனியார் பங்களிப்புடன் கப்பல் சேவைத் துவங்கப்பட உள்ளது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் ரூபாய் 10,600 கோடிக்கு புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.