கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவி வகித்து வருகிறார். இவர் வருகிற நவம்பர் 10ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டதன் பேரில், உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நவம்பர் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரமாக இருப்பதைக் குறிக்கிறது. ஆனால் நீதித்துறை சுதந்திரத்தின் அடிப்படையில் அது மட்டும் அல்ல. நம் சமூகம் மாறிவிட்டது. குறிப்பாக சமூக ஊடகங்களின் வருகையால், மின்னணு ஊடகங்களைப் பயன்படுத்தி சாதகமான முடிவுகளைப் பெற நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி நடக்கிறது.
தங்களுக்கு சாதகமான தீர்ப்பை நீதிபதிகள் வழங்கும் போது தான், நீதித்துறை சுதந்திரமாக இருப்பதாக கருதப்படுகிறது ஒருவேளை அப்படி அந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றால் நீதித்துறை சுதந்திரமாக இல்லை என்று கருதப்படுகிறது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு நீதிபதிக்கு அவர்களின் மனசாட்சி என்ன சொல்கிறது என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். நிச்சயமாக அந்த மனசாட்சி, சட்டம் மற்றும் அரசியலமைப்பால் வழிநடத்தப்பட வேண்டும்.
அரசுக்கு எதிராக இருக்கக்கூடிய வழக்குகளுக்கு அரசுக்கு எதிராக முடிவு செய்தோம். ஆனால், ஒரு வழக்கில் அரசுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் எனச் சட்டம் கூறினால், சட்டப்படி முடிவு எடுக்க வேண்டும். தேர்தல் பத்திரங்களைத் தீர்மானிக்கும்போது, நீதித்துறை மிகவும் சுதந்திரமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அரசுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தால், நீங்கள் சுதந்திரமானவர் இல்லை என்று கருதப்படுகிறது. ஆனால், சுதந்திரம் பற்றி எனது வரையறை இதுவல்ல” என்று கூறினார்.