கடந்த 2022ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்த டி.ஒய்.சந்திரசூட், ஓய்வு பெற்ற பிறகு புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா நேற்று பதவியேற்றார்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க வாய்மொழியாக முறையிட அனுமதிக்கப்படாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “அவசர விசாரணைகளைக் கோருவதற்கு வழக்கறிஞர்கள் மின்னஞ்சல்கள் அல்லது எழுதப்பட்ட கடிதங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த எழுத்துப்பூர்வ தகவல்களில் அவசரமாக விசாரிக்க வேண்டிய காரணங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். எழுத்து அல்லது வாய்மொழிக் குறிப்புகள் இனி அனுமதிக்கப்படாது” என அறிவுறுத்தியுள்ளார். தலைமை நீதிபதி சஞ்சீவி கண்ணாவின் இந்த நடவடிக்கை, நீதியை எளிதாக அணுகுவதையும், சமமாக நடத்துவதையும் உறுதி செய்யும் நோக்கத்தை கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் சஞ்சீவ் கண்ணா, மே 13, 2025 அன்று ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டின் போது உச்சநீதிமன்றத்தில் பதவியேற்ற சஞ்சீவ் கண்ணா, 370வது சட்டம், தேர்தல் பத்திரம் ஆகிய முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.