பொதுவான வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் ஆலோசித்துவருகின்றன. ஏற்கனவே இந்த பொது வாக்காளர் பட்டியல் தொடர்பாக மத்திய அரசோடு நடைபெற்ற இரண்டு கூட்டங்களில், தேர்தல் ஆணையம் சார்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கலந்துகொண்ட நிலையில், கடந்த 15ஆம் தேதி, பொது வாக்காளர் பட்டியல் தொடர்பாக பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே. மிஸ்ரா கூட்டம் ஒன்றை நடத்தப்போவதாகவும், அக்கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கடிதம், அரசியலமைப்பு விதிமுறைகளை மீறிய ஒரு சம்மன் போல இருந்ததால், தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு ஏற்பட்டதாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கூறியுள்ள அந்த நாளிதழ், இந்தக் கடிதத்தால் அதிருப்தியடைந்த தலைமை தேர்தல் ஆணையர், கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்துவிட்டதாகவும், மேலும் கடிதம் பெற்றுக்கொண்டதை உறுதிசெய்து சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட ரசீதில், தான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன் என தலைமை தேர்தல் ஆணையர் எழுதி அனுப்பியதாக மூத்த தேர்தல் ஆணையர் கூறியதாக கூறியுள்ளது.
அதேநேரத்தில், பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே. மிஸ்ரா நடத்திய கூட்டத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் கலந்துகொண்டதாகவும், தலைமை தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணையர்களும் கலந்துகொள்ளவில்லை எனவும், ஆனால் அந்தக் கூட்டம் முடிந்த பிறகு பி.கே. மிஸ்ராவோடு அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையில் தலைமை தேர்தல் ஆணையரும், மற்ற தேர்தல் ஆணையர்களும் பங்கேற்றார்கள் எனவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்ததாக அந்தநாளிதழ் கூறியுள்ளது.
இந்த அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையில், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து பேசப்பட்டதாகவும், நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தல் குறித்து எதுவும் பேசப்படவில்லை என மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் அந்த நாளிதழ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.