தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரத்தில் ஏற்பட்டது போன்ற day zero வருங்காலத்தில் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் ஏற்படலாம் என மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
நீர் சேமிப்பு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இந்தியாவின் நீர் மேலாண்மை குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், "இந்தியாவில் தண்ணீர் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் தேவைக்கு ஏற்ப தண்ணீர் இங்கு இல்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தனிநபருக்கான தண்ணீர் அளவு 5000 கியூபிக் மீட்டராக இருந்தது. ஆனால் தற்போது ஒரு நபருக்கு 1540 கியூபிக் மீட்டர் என்ற அளவிலேயே நீரின் அளவு உள்ளது. இந்தியாவில் மக்கள் உரிமைகளைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள், ஆனால் தங்களது பொறுப்புகளைப் பற்றி குறைவாகப் பேசுகிறார்கள்.
நீர் மேலாண்மைக்கு அரசாங்கம்தான் பொறுப்பு. ஆனால் மக்கள் மற்றும் தொழில்துறையினரின் பங்கும் இதில் முக்கியம். உலகிலேயே நிலத்தடி நீரை அதிகம் சார்ந்திருக்கும் நாடு இந்தியா. இருப்பினும், நம்மிடம் உள்ள மொத்த நீர் வைத்திப்பு திறன் 300 மில்லியன் கன மீட்டருக்கும் குறைவாகவே உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்கள், கேப்டவுன் நகரை போல் தண்ணீர் இல்லா நிலைக்கு (day zero) செல்லலாம். அதுமட்டுமல்லாமல் மற்ற சில நகரங்களுக்கும் அதிகளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்" என தெரிவித்தார்.