
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து, நடைபெறும் அடுத்தக்கட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, மொத்தம் 80 தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலம் அசாம்கர் பகுதியில் இன்று (16-05-24) பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கும் பணி தொடங்கிவிட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) விவகாரத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பொய்களைப் பரப்புகின்றன.
சி.ஏ.ஏ வின் கீழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இவர்கள்தான் நீண்ட காலமாக நாட்டில் அகதிகளாக வாழ்ந்து மத அடிப்படையில் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்கள். சமாஜ்வாதி, காங்கிரஸ் இரண்டு கட்சிகள். ஆனால் அவர்கள் விற்கும் பொருட்கள் ஒன்றுதான். சமாதானம், பொய்கள், குடும்ப அரசியல், ஊழல்களை விற்கிறார்கள். சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நாட்டின் பட்ஜெட்டை பிரித்து சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் ஒதுக்க வேண்டும் என விரும்புகின்றன” என்று கூறினார்.