ராஜஸ்தான் மாநிலன் அல்வார் மாவட்டத்தில் வசித்து வந்த விவசாயியான பெலுகான் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, தனக்கு சொந்தமான பசு மாடுகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஹரியானாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த போது, பசு காவலர்கள் என கூறப்பட்ட ஒருசிலரால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்ற செய்தி இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில் அவர் கொல்லப்பட்டு 2 ஆண்டுகள் கழித்து தற்போது ராஜஸ்தான் போலீஸ் பல்வேறு பிரிவுகளின் கீழ் பெலுகான் மற்றும் அவரது 2 மகன்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. மே 29ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றப்பத்திரிக்கையில் விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவுகள் 5, 8, 9 -ன் கீழ் அவர் மீதும், அவரது இரண்டு மகன்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2 வருடங்களுக்கு முன் இறந்த ஒருவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள ராஜஸ்தான் காவலர்களின் செயல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.