பிரபல இணைய உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி, ஆண்டுதோறும் தங்கள் தளத்தின் மூலமாக ஆர்டர் செய்யப்படும் உணவு வகைகளை வெளியிட்டுவருகிறது. அதன்படி 2021ஆம் ஆண்டு ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகள் குறித்து புள்ளி விவரங்களை ‘ஸ்டாட்ஈட்டிஸ்டிக்ஸ்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டும் பிரியாணிதான் இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகையாக உள்ளது. 2020ஆம் ஆண்டில் நிமிடத்திற்கு 90 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நிமிடத்திற்கு 115 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஒரு நொடிக்கு கிட்டத்தட்ட இரண்டு பிரியாணிகள் (1.91 பிரியாணி / 1 நொடி) இந்த வருடம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும், வெஜிடபிள் பிரியாணியைவிட 4.3 மடங்கு அதிகமாக சிக்கன் பிரியாணிதான் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் புதிதாக ஸ்விகியில் இணைந்தவர்களில் 4.25 லட்சம் பேர், முதன்முதலில் சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர்.
இந்த வருடத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட சிற்றுண்டியாக சமோசா உள்ளது. சமோசாவிற்காக 5 மில்லியன் ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன. அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட இனிப்பு வகையாக குலாப் ஜாமூன் உள்ளது. குலாப் ஜாமூனுக்காக 2.1 மில்லியன் ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டின் டிப்ஸை பொறுத்தவரை மிகவும் தாராளமான நகரமாக சென்னை உள்ளது. சென்னையில் ஒரே ஒரு ஆர்டருக்கு 6 ஆயிரம் ரூபாய் டிப்ஸாக வழங்கப்பட்டுள்ளது.