கஜா புயலைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவான ‘பெய்ட்டி’ புயல் மெல்ல நகர்ந்து காக்கிநாடா - ஏனாம் இடையே நேற்று மதியம் 3.50 மணிக்கு கரையை கடந்து, ஒடிசாவை நோக்கிச் சென்றது. அப்போது மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதில் ஆயிரக் கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஏராளமான மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன. சுவர் இடிந்து விழுந்தது மற்றும் மரங்கள் சாய்ந்த சம்பவங்களில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் காக்கிநாடாவிலிருந்து விசாகப்பட்டினம் கடற்பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற 6 மீனவர்களை காணவில்லை. விவசாய பயிர் சேதத்தை பொறுத்தவரை கிருஷ்ணா மாவட்டத்தில் 12 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்ததாக கூறப்படுகிறது.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திராவின் 7 கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை ஆந்திர அரசு செய்து கொடுத்தது. உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு உடனடி நிவாரணமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட விசாகப்பட்டினம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 நாட்கள் தங்கி, மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளைப் பார்வையிட உள்ளார்.