ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில், சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் சென்ற மாநில சிஐடி காவல்துறையினர் அவரிடம் கைது செய்வதற்கான கைது வாரண்ட்டை வழங்கினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு, நந்தியாலா பகுதியில் இருந்து விஜயவாடா சிறைக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு பதிவான இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவும் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் கைது நடவடிக்கையை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு, சந்திரபாபு நாயுடுவின் மனைவி, அவரது மகனும், கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ் உட்பட தெலுங்கு தேசம் கட்சியினர் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வந்தனர். இதற்கு ஆதரவாக சிறையில் இருந்து கொண்டே சந்திரபாபு நாயுடுவும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
இதற்கிடையே, சந்திரபாபு நாயுடு இருக்கின்ற சிறையில் வீர வெங்கர சத்யநாராயணா என்ற விசாரணை கைதி இருந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு, அவர் அங்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், தன் தந்தைக்கு இதே நிலையை ஏற்படுத்தி ஆபத்தை உருவாக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவரது மகன் நாரா லோகேஷ் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாரா லோகேஷ் நேற்று சந்தித்து பேசி உள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டிருப்பதாகவும், பழிவாங்கல் நடவடிக்கைக்காக ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு ஆட்சியை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் புகார் அளித்துள்ளதாக” பதிவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு, ஆந்திர பிரதேச மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அமித்ஷா மற்றும் நாரா லோகேஷ் சந்திப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.