நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், 2024 -2025 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று(23.7.2024) தாக்கல் செய்தார். அதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய நான்கு பிரிவினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஜனதாளம் ஆகிய கட்சிகளின் உதவியுடனே மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் அதற்குப் பிரதிபலனாகவே நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களைச் சந்தித்து இன்று (24-07-24) பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டிற்கு ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 1,302 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. 2009ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான அரசைக் காட்டிலும் ரயில்வேக்கு 7 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 687 பாலங்கள், ரயில்வே சுரங்கப் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ரூ. 6,080 கோடி தமிழகத்திற்கென ஒதுக்கப்பட்டது. ரூ.33,467 கோடி செலவில் 2,587 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் திட்டத்தை ரத்து செய்யுமாறு தமிழக அரசு கடிதம் கொடுத்துள்ளது. சென்னை கடற்கரை - எழும்பூர் 4வது வழித்தட திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு தாமதம் செய்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் திட்டங்களை நிறைவேற்ற 2,000 ஏக்கருக்கு மேல் நிலம் தேவை. தற்போது வரை 879 ஏக்கர் நிலம் வரை மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே விதிகளின்படி லோகோ பைலட்டுகளுக்கு ஓய்வு தரப்பட்டு வருகிறது. கர்நாடகா மாநிலத்திற்கு ரூ.7,559 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.