மத்திய அரசைக் கண்டித்து ஐஎன்டியூசி, சிஐடியூ, எச்எம்எஸ், தொமுச உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம், நிலக்கரி துறையில் 100% நேரடி அந்நிய முதலீடுக்கு மத்திய தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தொழிலாளர்கள் விதிமுறைப்படி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட அதிகாரம் அளிக்கப்படவில்லை. சங்கம் அமைக்கும் உரிமை என்பது வேலைநிறுத்தமோ, போராட்டமோ நடத்துவதற்கான உரிமை அல்ல. எந்த சட்டப்பிரிவும், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய அதிகாரம் அளிக்கவில்லை. எனவே மத்திய அரசு ஊழியர்கள் எந்த வகையான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.