நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, மத்திய நிதியமைச்சராக பொறுப்பு வகித்து வரும் நிர்மலா சீதாராமன், இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்ப்பு இருந்தது. இதனிடையே, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடப் போவதில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவர் கூறுகையில், தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்றும், ஆந்திரா, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் வெற்றிக்கான அளவுகோல்களைத் தன்னால் பூர்த்தி செய்ய இயலவில்லை என்றும் கூறினார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இனி தேர்தலே நடக்காது என மத்திய நிதியமைச்சரின் கணவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பரகால பிரபாகர் இது குறித்து கூறுகையில், “வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இனி நமது நாட்டில் தேர்தலே நடக்காது.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் அரசியல் சாசனமும், வரைபடமும் முற்றிலும் மாறும். மோடியே செங்கோட்டையில் இருந்து வெறுப்பு பேச்சை நிகழ்த்துவார். லடாக்-மணிப்பூர் போன்ற சூழல், நாடு முழுவதும் உருவாகும். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குகி மற்றும் மெய்தி சமூகங்களுக்கு இடையிலான இன மோதல்களால் மணிப்பூரில் ஏற்பட்ட அமைதியின்மை இந்தியா முழுவதும் வழக்கமானதாக மாறிவிடும்” என்று கூறினார்.
இவர், ஏற்கெனவே தேர்தல் பத்திரம் விவகாரம் தொடர்பாக பரபரப்பு கருத்து கூறினார். இது குறித்து அவர், “தேர்தல் பத்திர ஊழல் என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் மட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய ஊழலும் ஆகும். தேர்தல் பத்திர ஊழல் பகிரங்கமான பிறகு, இப்போது சண்டை இரண்டு கூட்டணிகளுக்கு இடையே இல்லை. பாஜக மற்றும் இந்திய மக்களுக்கு இடையே உள்ளது” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.