மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைத்திருக்க முடியும். ஆனால், அவர்கள் அதைச் செய்ய முன்வரமாட்டார்கள் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டுவருவோம் என்ற வாக்குறுதியை முன்னிறுத்தி ஆட்சியைப் பிடித்தது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு. ஆனால், அந்த வாக்குறுதியை அப்படியே மறந்துவிட்ட நிலையில், தற்போது பெட்ரோல் விலை ரூ.80ஐ எட்டியிருக்கிறது. உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நிலையிலும், மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல் விலையை உயர்த்தி வருவது பலரிடமும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி, கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்காக பெட்ரோல் விலையை நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது தொடர்ந்து அதை உயர்த்திக் கொண்டே வருவது குறித்து எதிர்க்கட்சிகளும் மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், ‘தற்போதைய சூழலில் பெட்ரோல் விலையில் ரூ.25 வரை குறைக்கமுடியும். ஆனால், மத்திய அரசு அதைக் குறைக்க விரும்பவில்லை. எப்போதாவது ரூ.1 அல்லது ரூ.2 ஐக் குறைத்துவிட்டு மக்களை வழக்கம்போல் ஏமாற்றுவார்கள். குறிப்பாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தபோது மத்திய அரசு ரூ.15 வரை பெட்ரோல் விலையில் லாபம் ஈட்டியது. அது போதாதென்று ரூ.10 வரை வரியை உயர்த்தி சாமன்ய மக்களை வஞ்சித்து கூடுதல் லாபம் பார்த்து வருகிறது. இப்போதுகூட மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்கலாம். ஆனால், அது நடக்காது. உண்மையில் அது சாமான்யர்கள் மற்றும் சராசரி நுகர்வோர்களைச் சென்றுசேர வேண்டிய பணம்’ என தெரிவித்துள்ளார்.