உலகத்தின் பல்வேறு நாடுகளில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் அரசாங்கத்துக்கு வரி கட்டாமல் பல ஆயிரம் கோடிகளைப் பதுக்கி வைத்திருக்கும் விவகாரம் தற்போது வெடித்துக் கிளம்பியிருக்கிறது.
அரசுக்கு வரி கட்டாமல் கோடிகளைப் பதுக்கும் பெரிய புள்ளிகளையும் அவர்கள் பதுக்கி வைத்திருக்கும் கோடிகளையும் ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் அம்பலமாகியிருப்பது உலகத்தை உலுக்கியிருக்கிறது. அதுகுறித்த ரகசிய ஆவணங்கள் வெளியாகி சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக நிறுனங்களும் பத்திரிகையாளர்களும் இணைந்த புலனாய்வு அமைப்பு இந்த ரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளது. தலைசிறந்த பத்திரிகையாளர்கள் பலரும் இந்த முறைகேடுகளைக் கண்டறிய துணைபுரிந்துள்ளனர்.
அறக்கட்டளைகள் பெயரில் பாகிஸ்தான் அமைச்சர்கள் பலரும் கோடிக்கணக்கில் சொத்துக்களைக் குவித்து வைத்திருப்பதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, கென்ய ஜனாதிபதி ஊஹூரு, சைப்ரஸ் அதிபர் நிக்கோஸ், ஈக்வாடார் ஜனாதிபதி கில்லர்மோ என பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் சொத்துக்கள் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இதில் இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பிரபல தொழிலதிபர் அம்பானி உள்பட 300க்கும் மேற்பட வி.வி.ஐ.பி.க்களின் கோடிகளும் இடம்பிடித்துள்ளன. இந்த ரகசிய ஆவணங்கள் கசிந்த நிலையில், பட்டியலில் இருக்கும் பலரும், தாங்கள் வெளிப்படையாகவும், சட்டத்திற்குட்பட்டும் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
கரீபியன் தீவு பகுதிகளில் சச்சினும் அவரது குடும்பத்தினரும் சொத்துக்களை வாங்கியிருப்பதாக ரகசிய அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், இதனை மறுத்துள்ள சச்சின் டெண்டுல்கரின் அறக்கட்டளை இயக்குநர் பிரின்மோய் முகர்ஜி, “வெளிநாடுகளில் சச்சின் டெண்டுல்கர் முதலீடுகள் செய்திருப்பது அனைத்தும் வெளிப்படையானவை. சட்டத்திற்குட்பட்டு முறையான வரிகள் செலுத்திய சொத்துக்கள் அவை. தவறுகள் ஏதும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.