கரோனாவிற்கெதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசியைக் கண்டுபிடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளன. இவ்வாறு பயன்பாட்டில் உள்ள கரோனா தடுப்பூசிகளில் பெரும்பான்மையானவை இரண்டு டோஸ்களைக் கொண்டுள்ளது. மக்களுக்கு எந்த தடுப்பூசி முதல் டோஸாக செலுத்தப்படுகிறதோ, அதே தடுப்பூசிதான் இரண்டாவது டோஸாகவும் செலுத்தப்பட்டுவருகிறது.
இதற்கிடையே முதல் டோஸாக ஒரு தடுப்பூசியையும், இரண்டாவது டோஸாக வேறொரு தடுப்பூசியையும் செலுத்திக்கொள்வது குறித்து வெளிநாடுகளில் சில ஆய்வுகள் நடந்துள்ளன. அதில் இரண்டு தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது ஆபத்தானது அல்ல என்றே இதுவரை முடிவுகள் வந்துள்ளன. இந்நிலையில், இந்தியாவில் முழுமையான பயன்பாட்டில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது குறித்த ஆய்விற்கு அனுமதியளிக்க மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது குறித்த ஆய்வினை நடத்த, வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரைத்திருப்பதாகவும், அனுமதி வழங்கப்பட்டவுடன் 300 ஆரோக்கியமான தன்னார்வலர்கள் மீது இந்த சோதனை நடத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 5 - 17 வயதான குழந்தைகள் மீது தங்களது தடுப்பூசியை சோதனை செய்ய அனுமதி கோரிய பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் விண்ணப்பத்தைப் பரிசீலித்த மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு, முதலில் அத்தடுப்பூசியைக் கொண்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சோதனையின் இரண்டாவது பகுதி தரவுகளை சமர்ப்பிக்க பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தை அறிவுறுத்தியுள்ளது என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறியுள்ளன.