சி.பி.எஸ்.இ (CBSE- CENTRAL BOARD OF SECONDARY EDUCATION) 10- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை சி.பி.எஸ்.இ நிர்வாகம் அதிரடியாக உயர்த்தி அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் ரூபாய் 750-ல் இருந்து ரூபாய் 1,500 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கூடுதல் பாடத்துக்கான தேர்வு கட்டணம், ஒரு பாடத்திற்கு ரூபாய் 300 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பார்வை திறனற்ற மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பட்டியல் இன மாணவர்களுக்கு (எஸ்.சி, எஸ்.டி.) 5 பாடங்களுக்கான தேர்வு கட்டணம் ரூபாய் 50-ல் இருந்து ரூபாய் 1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு கூடுதல் பாடத்துக்கு தேர்வு கட்டணம், முன்பு இல்லாமல் இருந்தது. தற்போது, கூடுதல் பாடத்துக்கு தலா ரூபாய் 300 செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பதிவு செய்த மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் ரூபாய் 5,000 இருந்து ரூபாய் 10,000 ஆக உயர்ந்துள்ளது. கூடுதல் பாடத்துக்கான கட்டணம் ரூபாய் 1,000-ல் இருந்து ரூபாய் 2,000 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே மாணவர்களிடம் சி.பி.எஸ்..இ பள்ளிகள் பொது தேர்வுக்கான கட்டணங்களை பெற்ற நிலையில், புதிய தேர்வு கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிக்க சி.பி.எஸ்.இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்கள் ஏற்கனவே தேர்வு கட்டணத்தை செலுத்தி இருந்தால், புதிய கட்டணத்தின் படி மீதமுள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் தேர்வுக்கு அனுமதிக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் இத்தகைய அறிவிப்பால், சி.பி.எஸ்.இ மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.