இந்தியா முழுவதும் கரோனாவின் இரண்டாம் அலை பரவல் அதிகமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருப்பதால் பல மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் நாள் கணக்கில் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாக்பூரில் 40 வயது நபருக்காக மருத்துவமனையில் படுக்கையை விட்டுக்கொடுத்துவிட்டு வீடு திரும்பிய 85 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் கண் கலங்கச் செய்துள்ளது. நாரயணன் தபால்கர் என்ற 85 வயது முதியவர், கடந்த 22ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, நீண்ட போராட்டத்திற்கு பின்பு நாக்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆக்சிஜன் அளவு குறைந்து அவரது உடல்நிலை மோசமாக இருந்திருக்கிறது.
ஆனால், மருத்துவமனையில் சேர்ந்து படுக்கை வசதி எற்படுத்திக் கொடுத்த இரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். குடும்பத்தினர் கேட்டதற்கு, “40 வயது நிரம்பிய ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் வந்தார். அவருக்குப் படுக்கை வசதி ஒதுக்கி தரக் கோரி அவரது மனைவி கதறியதால், என்னுடைய படுக்கையை விட்டுக்கொடுத்துவிட்டு வீடு திரும்பினேன்” எனக் கூறியுள்ளார். மேலும் “நான் வாழ்ந்து முடித்தவன். நான் ஒரு படுக்கையை ஆக்கிரமித்திருப்பதால், வாழ வேண்டிய நபரின் உயிர் பிரிவதை விரும்பவில்லை” என குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. தங்களது அறிவுரையை மீறி தபால்கர் மருத்துவமனையைவிட்டு வெளியேறியதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.