காவிரியில் இருந்து நீர் திறப்பது தொடர்பாக தமிழகம் கர்நாடகா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. இந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்க மத்திய அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று (11.07.2024) நடைபெற்றது.
அப்போது தமிழக அரசு தரப்பில், “கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு உரிய கர்நாடக அரசு நீரை திறந்து விடவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான நீரை உரிய முறையில் திறந்து விடவில்லை. அதோடு இந்த ஆண்டு கர்நாடகாவில் வழக்கமான மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. ஆனாலும் கூட கர்நாடக அரசு சார்பில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காமல் இருப்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறும் செயல். ஆகவே தண்ணீரை திறக்க உத்தரவிடுங்கள்” என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
கர்நாடக அரசோ வழக்கம் போல தங்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது போன்ற கருத்துகளை முன் வைத்தனர். இதனையடுத்து காவிரி ஒழுங்காற்று குழு, “தமிழகத்திற்கு நாளை (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி வரை நாள் தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பதை கர்நாடக அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.