காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் காணொளி வாயிலாக நேற்று (30.10.2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினித் குப்தா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்ரமணியம், தலைமை பொறியாளர் சுப்ரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்குத் தமிழகத்திற்கு கர்நாடகா 2,600 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் எனப் பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தது.
அதே சமயம் இந்தப் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “தமிழகத்திற்கு காவிரியில் இருந்து மேலும் நீர் திறப்பு என்பது இயலாத காரியம். கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருக்கும் தண்ணீர் தங்களுக்கே போதுமானதாக இல்லை. இந்த அணைகளில் இருக்கும் நீர் குடிநீர் சேவைக்கே போதுமானதாக இருக்கும் காரணத்தால் தமிழகத்திற்கு நீரை கொடுக்க இயலாது' எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நவம்பர் 3 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமை தாங்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் சார்பில் நீர்வளத்துறையின் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு நேற்று பிறப்பித்த பரிந்துரைகளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் உத்தரவாக வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.