
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14 ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 53 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு இதுவரை 15 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளதாகவும், காவிரியில் இருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதலமைச்சர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா, மேகதாது அணை கட்ட அனுமதிக்க கோரி அனைத்துக் கட்சி குழுவை டெல்லி அழைத்துச் சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம். கர்நாடகாவில் தற்போது போதிய மழை பெய்யாமல், நீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் இது குறித்து பிரதமர் மோடியைச் சந்தித்து விளக்கமளிக்கவுள்ளோம். இது தொடர்பாக சட்டப் போராட்டம் நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளித்துள்ளனர்” என்றார்.