தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ள பாறசாலை பகுதியைச் சேர்ந்த ஷாரோன் என்ற இளைஞருக்கு களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் சிறைப் பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா என்ற இளம்பெண் விஷம் கொடுத்துக் கொலை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அதே சமயம் கிரீஷ்மாவை கைது செய்த போலீசார் அவரிடம் அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிரீஷ்மா, தனது முதல் கணவருக்கு மரணம் ஏற்படும் என்று ஜாதகத்தில் சொல்லப்பட்டதால் தனது காதலன் ஷாரோனை கொலை செய்ய கிட்டத்தட்ட 10 முறை முயன்றதாகவும், பலமுறை குளிர்பானத்தில் காய்ச்சல் மருந்துகளை அதிக அளவில் கலந்து கொடுத்துக் கொல்ல முயன்றதும் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் கிரீஷ்மாவின் தாயார் சிந்து, தாய்மாமன் நிர்மல்குமார் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலனைக் கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள இளம் பெண் கிரீஷ்மா, ஜாமீன் கோரி கேரள மாநில உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து இளம்பெண் கிரீஷ்மாவுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.