இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகள் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து, அமல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், கர்நாடக மாநில அரசு இன்று (18/07/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கர்நாடகாவில் நாளை (19/07/2021) முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நாளை (19/07/2021) முதல் இரவு 10.00 மணி முதல் காலை 05.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 26- ஆம் தேதி முதல் உயர்கல்வி நிறுவனங்களையும் திறக்க கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசிப் போட்டவர்களை மட்டுமே கல்வி நிறுவனங்களில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.