முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கார் பார்க்கிங் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும். இது குறித்து இரு மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்” என தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.