கர்நாடக மாநிலத்தில் 3 மக்களவைத் தொகுதிகள், இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ராம்நகர் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக சந்திரசேகர் நிறுத்தப்பட்டார்.
இந்தநிலையில் அவர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது அவர், தனக்காக பாஜக தலைவர்கள், முன்னணி நிர்வாகிகள் யாரும் பிரச்சாரம் செய்ய வரவில்லை. ஆதரிக்கவும் இல்லை என்று கூறியுள்ளார்.
பாஜக வேட்பாளர் கட்சி தாவியதையடுத்து ராம்நகரில் போட்டியிடும் கர்நாடகா முதல் அமைச்சரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமியின் மனைவி அனிதாவின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று கூறப்படுகிறது.
அனிதா போட்டியிட்டது எப்படி?
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் குமாரசாமி செனப்பட்டனா, ராம்நகர் ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதல்-மந்திரி ஆனார்.
இதையடுத்து ராம்நகர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். இந்தநிலையில் ஜம்கண்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.சிந்துநியாமகவுடா விபத்தில் மரணம் அடைந்தார்.
காலியாக உள்ள ராம்நகர், ஜம்கண்டி ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஜம்கண்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ராம்நகர் தொகுதியில் மத சார்பற்ற குமாரசாமியின் மனைவி அனிதாவும் போட்டியிடுகிறார்.