உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜு சைனி. இவர் ஒப்பந்த ரோட்வேஸ் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், மாநில போக்குவரத்து கழகம் மீது குற்றம் சாட்டி விக்ரமாதித்யா மார்க் பகுதியில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் அலுவலகம் அருகே உள்ள மொபைல் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த லக்னோ போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை கீழே இறக்குவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அவர் கீழே இறங்காமல் மாநில போக்குவரத்து கழகம் மீது குற்றம் சாட்டினார். அதில், உத்தரப் பிரதேச மாநில சாலை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தனது ஒப்பந்ததை நீட்டிப்பதற்காக பணம் கேட்பதாகவும், இதை எதிர்த்ததால், உதவி பிராந்திய அதிகாரி ஒருவர் தன்னை இரண்டு முறை தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார். அதன் பின்னர், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜு சைனி கோரிக்கை வைத்து மொபைல் டவரிலே இருந்தார்.
இதையடுத்து, போக்குவரத்து கழக உயர் அதிகரிகளின் தலையீட்டின் பேரில் ராஜு சைனியை மொபைல் டவரில் கீழே இறங்க சம்மதிக்க வைத்தனர். இந்த ஆண்டு ஜூன் மாதம், தனது சம்பளத்தை உயர் அதிகாரிகள் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி லக்னோவில் கைசர்பாக்கில் உள்ள மொபைல் டவரில் ராஜு சைனி ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.