மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு, நேற்று (21.02.2021) ஒரேநாளில் அங்கு 7 ஆயிரம் பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்ரே, “அடுத்த இரண்டு வாரங்களுக்குக் கரோனா தொடர்ந்து அதிகரித்தால், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கரோனா தொற்று பரவலின் நிலை, அபாயகரமானதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் அமராவதி மாநகராட்சி மற்றும் அச்சல்பூர் நகராட்சியில் கரோனா பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இப்பகுதிகளில் இன்று (22.02.21) இரவு 8 மணியிலிருந்து, மார்ச் 1 ஆம் தேதி காலை 6 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அமராவதி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த ஊரடங்கின்போது காலை 8 மணியிலிருந்து, மதியம் மூன்று மணிவரை அத்தியாவசியப் பொருட்களுக்களான கடை திறந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல் நாசிக் மாவட்டத்தில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. அடுத்தகட்ட உத்தரவு வரும்வரை இரவு 11 மணிமுதல் காலை 5 மணி அங்கு இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்குமென நாசிக் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.