டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்காக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி, பாஜக, மற்றும் காங்கிரஸ் என மூன்று முக்கிய கட்சிகளும் தனித்து நின்று மும்முனை போட்டியை ஏற்படுத்தினாலும், பாஜக மற்றும் ஆம் ஆத்மீ கட்சிகளுக்கு இடையேதான் டெல்லியில் கடும் போட்டி நிலவி வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
70 தொகுதிகளையும் சேர்த்து 1.46 கோடி வாக்காளர்களுக்கு 13, 750 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 2,689 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை எனவும், 545 வாக்குச்சாவடிகள் அதீத பதற்றமானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. தேர்தலை முன்னிட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது.