சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் இருந்து தரிசனம் முடித்து விட்டு திரும்பிய தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் சென்ற பேருந்து தேனி அருகே கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் 61 பேர் தனிபேருந்து மூலம் கேரளாவிற்குச் சென்று தரிசனம் முடித்து விட்டுத் திரும்பினர். பேருந்து கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியில் உள்ள இலவுங்கல் பகுதியில் சென்று கொண்டிருந்தது அப்போது மூன்றாம் வளைவில் திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
பேருந்து விபத்திற்குள்ளானதில் பேருந்தில் இருந்த 61 பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டது. முதற்கட்டமாக அவ்வழியே சென்ற பக்தர்கள் பேருந்தில் இருந்தவர்களை மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு பேருந்திலிருந்து காயமடைந்தவர்களை மீட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் விபத்து நடந்த பகுதிக்கு அருகில், எரிமேலியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.